புதுடெல்லி,
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர்சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சில நாடுகளில் நடைபெற்றுவரும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை நிலவியது. இந்த சூழ்நிலையை முன்னிட்டு மத்திய கல்வி வாரியம் புதிய தீர்வை அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரான் பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்சூழ்நிலையை கருத்தில் கொண்டு பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கான சில பாடத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன.
இதனால் மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், மத்திய கல்வி வாரியம் தேர்வு முடிவுகளை கணக்கிட புதிய முறையை அறிவித்துள்ளது.
அதன்படி, மாணவர்கள் ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தப்பட உள்ளனர். அனைத்து பாடங்களையும் எழுதியவர்கள், நான்கு பாடங்கள் எழுதியவர்கள், மூன்று பாடங்கள் எழுதியவர்கள், இரண்டு பாடங்கள் எழுதியவர்கள் மற்றும் தனித்தனி தேர்வர்கள் என பிரிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து பாடங்களையும் எழுதிய மாணவர்களுக்கு வழக்கம்போல் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால், மற்ற மாணவர்களுக்கு அவர்கள் எழுதிய பாடங்களின் சராசரி மதிப்பெண்கள் அடிப்படையாக கொண்டு முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும், நான்கு பாடங்கள், மூன்று பாடங்கள் மற்றும் இரண்டு பாடங்கள் மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு தனித்தனி கணக்கீட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய திட்டம் மூலம், போர்சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயமான மதிப்பீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி பயணம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.