‘ககன்யான்’ திட்டம் – பாராசூட் சோதனை வெற்றிகரமாக நிறைவு
சண்டிகர்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகப்பெரிய கனவு திட்டமாக உருவாகி வரும் ‘ககன்யான்’ திட்டம், இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் முதல் முயற்சியாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் மூன்று இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்கள் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்புவதை உறுதி செய்வதாகும். இந்த திட்டத்தை 2027-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
விண்வெளி வீரர்கள் பயணம் முடித்து பூமிக்குத் திரும்பும்போது, அவர்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமான கட்டமாகும். அதற்காக விண்கலனில் பாராசூட் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. விண்கலம் பூமியை நோக்கி இறங்கும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள 10 பாராசூட்கள் அடுத்தடுத்து விரிவடைந்து, விண்கலத்தின் வேகத்தை குறைத்து, தரையிறங்கும் போது அதிர்ச்சியை குறைக்கும்.
இந்த பாராசூட் அமைப்பு சரியாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், இஸ்ரோ இன்று சண்டிகரில் உள்ள ஆர்.டி.ஆர்.எஸ். ஆய்வகத்தில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாராசூட்டுகளின் உறுதித்தன்மை, செயல்திறன், மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மதிப்பீடு செய்ய இரண்டு தனித்தனி சோதனைகள் நடத்தப்பட்டன. இரண்டும் வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சோதனை வெற்றி, ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. விண்கலன் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்யும் இந்த பரிசோதனை, எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிக்கு வலுவான அடித்தளமாக அமைகிறது.
இஸ்ரோவின் அறிவிப்பின்படி, பாராசூட் சோதனையின் வெற்றி, ககன்யான் திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் சரியான பாதையில் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம், இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம் வெற்றிகரமாக நடைபெறும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.