சென்னை,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. ஆளும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் பலத்துடன் களம் காண்கிறது.

இந்த கூட்டணியில் அ.தி.மு.க. 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளாக பா.ஜ.க.க்கு 26, பா.ம.க.க்கு 18, அ.ம.மு.க.க்கு 11, த.மா.கா.க்கு 5, புதிய நீதிக்கட்சிக்கு 2, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் மற்றும் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 234 தொகுதிகளிலும் கூட்டணி போட்டியிடுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் இடம் குறித்த விவகாரம் சமீபத்தில் பேசுபொருளாக இருந்தது. தொகுதி பங்கீட்டின் போது புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் கலந்துகொள்ளாததால், அவர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஏ.சி. சண்முகம் ஆலோசனை நடத்தியார். அந்த சந்திப்பில் புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் வழங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒரு தொகுதி அ.தி.மு.க. சார்பிலும், மற்றொன்று பா.ஜ.க. சார்பிலும் ஒதுக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, மதுரை மத்திய தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கான வேட்பாளராக திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பா.ஜ.க. சார்பில் ஒதுக்கப்பட உள்ள இரண்டாவது தொகுதியும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதனுடன், அந்த தொகுதிக்கான வேட்பாளரும் திங்கட்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்.

மதுரை மத்திய தொகுதி தற்போது தி.மு.க.வின் முக்கிய தலைவரும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் பதவி வகிக்கும் தொகுதியாக இருப்பதால், இந்த முறை கடுமையான போட்டி நிலவக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதுகுறித்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மத்திய தொகுதியில் எங்கள் கட்சியின் சார்பில் சுந்தர் சி போட்டியிடுவார். மேலும், கூட்டணியில் எங்களுக்கு வழங்கப்படும் மற்றொரு தொகுதி மற்றும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், புதிய நீதிக்கட்சியின் இந்த அறிவிப்பு தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.