சென்னை,
கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் மற்றும் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கட்சியை குறிவைத்து வெளியிடப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கடுமையாக பதிலளித்தார்.

அவர் கூறுகையில், “தேமுதிக மீது எந்த குறையும் சொல்ல முடியாமல், உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக, சில இணைய தளங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. ஆனால் அவற்றைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன். லஞ்சம், ஊழல், சொத்து குவிப்பு, கள்ளச்சாராயம், குண்டர் சட்டம், கனிம வள கொள்ளை போன்ற எந்த குற்றச்சாட்டையும் எங்கள் கட்சியுடன் தொடர்புபடுத்த முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், தேமுதிக கடந்த 21 ஆண்டுகளாக அரசியல் தளத்தில் செயல்பட்டு வருவதாகவும், 29 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக கேப்டன் விஜயகாந்த் சட்டமன்றத்தில் பணியாற்றிய பெருமை கொண்ட கட்சி என்றும் அவர் வலியுறுத்தினார். “கேப்டனை கடந்த காலத்தில் எப்படி தவறாக சித்தரித்தார்களோ, அதேபோல் இன்று எங்களையும் குறை கூற முயற்சிக்கின்றனர்” என்றும் கூறினார்.
தனது குடும்பம் குறித்து பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து பேசுகையில், “எங்கள் குடும்பம் ஒரு வாகனத்தை வாங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. அதை பயன்படுத்தி திருப்பதி சென்று வந்தோம். ஆனால் தற்போது அதையே தவறான கோணத்தில் பேசுகிறார்கள். ஒரு கார் வாங்கும் அளவுக்கு கூட கேப்டன் குடும்பத்திற்கு தகுதி இல்லையா?” என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.
மேலும், “கேப்டன் விஜயகாந்த் தன்னால் சம்பாதிக்கப்பட்ட சொத்தில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவழித்து பல நலத்திட்டங்களை செய்தவர். அவர் செய்த ஒவ்வொரு உதவிக்கும் பின்னாலும் நான் இருந்தேன் என்பதை அனைவரும் அறிவார்கள்” என்றும் கூறினார்.
சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை பற்றி அவர் கூறுகையில், “குறை சொல்லும் வாய் குறை சொல்லிக் கொண்டே இருக்கும். குரைக்கும் நாய் குரைக்கட்டும். அனைத்து ஊடகங்களும் தேமுதிக பற்றியே பேசுகின்றன. குறைந்த வாக்கு விகிதம் கொண்ட கட்சிக்கு ஏன் இடங்கள் வழங்கப்படுகின்றன என்று கேட்பவர்கள், முதலில் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். எத்தனை தொகுதிகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது இன்னும் யாருக்கும் தெரியாது. தெரியாமல் விமர்சிக்க கூடாது” என்றார்.
இறுதியாக, “வாழ்த்துவோர் வாழ்த்தட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எங்கள் அனைத்து புகழும் கேப்டனுக்கே” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.