சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த தொகுதிகளில் எந்தெந்த பகுதிகளை தி.மு.க.விடம் கேட்டு பெறுவது என்பது குறித்து காங்கிரஸ் கட்சியில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர் மற்றும் கே.வி. தங்கபாலு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி எந்த தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், எந்த புதிய தொகுதிகளை கோர வேண்டும் என்பது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அல்லது வலுவான ஆதரவு கொண்ட தொகுதிகளை மீண்டும் பெற வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. ஆனால், இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில், வெளியான பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே இறுதி எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ள 17 தொகுதிகளை மீண்டும் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் காரைக்குடி, சிவகாசி, அறந்தாங்கி, ஸ்ரீபெரும்புதூர் (தனி), வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஊட்டி, நாங்குநேரி, மயிலாடுதுறை, பொன்னேரி, சோழிங்கர், ஸ்ரீவைகுண்டம், தென்காசி, திருவாடானை மற்றும் விருதாச்சலம் ஆகியவை அடங்கும்.
இதற்கு மேலாக, கூடுதலாக 11 புதிய தொகுதிகளையும் கேட்டு பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு மொத்தம் 28 தொகுதிகளை இலக்காக கொண்டு பேச்சுவார்த்தை நடத்த தயாராகியுள்ளது.
மேலும், கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களில் பலருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாமல் புதிய முகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது கட்சியின் தேர்தல் திட்டத்தில் ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
தொகுதிகள் தொடர்பான இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு, அது கட்சி உயர்மட்ட தலைமையிடம் அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, தி.மு.க.வுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த பட்டியல் முன்வைக்கப்படும் என காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.