புதுடில்லி: புயல் மற்றும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவி செய்ய இந்தியா விரைவான மனிதாபிமான நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிவாரணப் பொருட்களுடன் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சுகன்யா கப்பல் திரிகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பகுதிகளில் கனமழை மற்றும் சூறாவளி காற்று பெரும் அழிவை ஏற்படுத்தியது. குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து சேதம் அதிகரித்தது. கொழும்பு மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மரண எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், மாயமான 350-க்கும் மேற்பட்டோர் தொடர்பாக தேடுதல் பணியில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைக்கு உதவும் வகையில், இந்தியா ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’ திட்டத்தின் கீழ் விரைவான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படையின் இரண்டு விமானங்கள் மூலம் 80 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் (NDRF) மற்றும் 21 டன் அத்தியாவசிய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. மேலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் தனி விமானம் மூலம் அனுப்பப்பட்டன.
தற்போது, நிவாரணப் பொருட்களுடன் வந்துள்ள ஐ.என்.எஸ். சுகன்யா கப்பல் திரிகோணமலையில் உதவி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. இதுகுறித்த படங்களை வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், கடற்படையின் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.