ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி: சுற்றுப்பயணத்தின் முக்கிய தருணம்

பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் மற்றும் ஒத்துழைப்பு பேச்சுவார்த்தைகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக அவர் நேற்று ஜோர்டான் நாட்டை சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்திலேயே ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹசன் நேரடியாக வரவேற்று மரியாதை செலுத்தினார். பின்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அவரது அரண்மனையில் சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா, ஜோர்டானின் அருட்காட்சியகத்திற்கு தனிப்பட்ட முறையில் காரில் அழைத்து சென்றார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்த இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரு நாடுகளின் தலைமைத்துவத்திற்கிடையேயான நெருக்கமான நட்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தும் தருணமாக இது பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி அருட்காட்சியகத்தில் ஜோர்டானின் வரலாறு, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு அரிய பொருட்களை பார்வையிட்டார். இளவரசர் நேரடியாக வழிகாட்டியாக இருந்து, அருங்காட்சியகத்தின் முக்கிய அம்சங்களை பிரதமருக்கு அறிமுகப்படுத்தினார்.

சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக பிரதமர் மோடி எத்தியோப்பியா புறப்பட வேண்டியிருந்ததால், அவரை விமான நிலையம் வரை அழைத்துச் செல்லும் பொறுப்பையும் ஜோர்டான் பட்டத்து இளவரசர் தானே ஏற்றுக்கொண்டார். காரை நேரடியாக தானே ஓட்டி, பிரதமரை விமான நிலையம் வரை அழைத்துச் சென்ற இளவரசரின் இந்த நடத்தை, இரு நாடுகளின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் கவனம் ஈர்த்துள்ளது.

பிரதமர் மோடி ஜோர்டானில் தனது பயணத்தை முடித்து எத்தியோப்பியா நோக்கி புறப்பட்ட நிலையில், இந்த பயணத்தின் பல தருணங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.