பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தின் 2026–2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்தார். இதில் மாநிலத்தின் வருவாய், செலவுகள் மற்றும் பல்வேறு துறைகளுக்கான வரி இலக்குகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் கூறப்பட்டதன்படி, 2026–2027 ஆம் நிதியாண்டில் வணிக வரி வருவாய் இலக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலால் துறையில் நடைபெறும் பணியிடமாற்றங்கள் இனிமேல் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள முறையில் பல நிலைகளில் நிர்ணயிக்கப்படும் வரி முறையை மாற்றி, மதுபானத்தின் லிட்டர் அளவை அடிப்படையாக கொண்டு வரி விதிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி முறை அடுத்த 3 முதல் 4 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மதுபான விலை நிர்ணயம் 16 நிலைகளில் கணக்கிடப்பட்டு வருவது, புதிய முறையில் 8 நிலைகளாக குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மூலம் மாநில அரசுக்கு கலால் வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026–2027 ஆம் ஆண்டுக்கான கலால் துறை வரி வருவாய் இலக்காக ரூ.45 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முத்திரை மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் மூலம் ரூ.29 ஆயிரம் கோடி வருவாய் பெறும் இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து துறையின் மூலம் ரூ.15 ஆயிரத்து 500 கோடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. கனிம வளத்துறையில் காப்புரிமை மூலம் கிடைக்கும் வருவாயை ரூ.11 ஆயிரம் கோடியாக நிர்ணயித்துள்ளதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தமாக 2026–2027 ஆம் ஆண்டுக்கான கர்நாடக மாநில வருவாய் ரூ.3 லட்சத்து 15 ஆயிரத்து 50 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கோடியும், வரி அல்லாத வருவாயாக ரூ.16 ஆயிரம் கோடியும் பெறப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய வரிப்பகிர்வு மற்றும் பிற நிதி ஆதாரங்கள் மூலம் ரூ.79 ஆயிரத்து 50 கோடி கிடைக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதனுடன், நேரடி கடனாக ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் கோடியும், முதலீட்டு கடன் மூலம் ரூ.190 கோடியும் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தமாக ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்து 240 கோடி நிதி திரட்ட மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் மொத்த செலவினம் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்து 4 கோடியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வருவாய் பற்றாக்குறை ரூ.33 ஆயிரத்து 957 கோடியாகவும், மொத்த நிதி பற்றாக்குறை ரூ.97 ஆயிரத்து 449 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8 லட்சத்து 24 ஆயிரத்து 389 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் கடன் மற்றும் நிதி பற்றாக்குறை கர்நாடக நிதி பொறுப்பு சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாகவும், மாநில அரசு நிதி மேலாண்மையை பொறுப்புடன் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கலால் வரி அமைப்பில் செய்யப்படும் இந்த மாற்றங்கள் காரணமாக கர்நாடகத்தில் மதுபான விலை உயர வாய்ப்பு இருப்பதாக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பேசப்படுகிறது. பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு மதுபான விலை உயர்வுக்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுவதாக கருதப்படுகிறது.