சென்னை:

தமிழ்நாட்டு மக்களுடன் பழகிய அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தமிழக மக்களுக்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது: “அன்புச் சகோதர சகோதரிகளே, தமிழ்நாட்டின் அன்பான மக்களே! கடந்த 54 மாதங்களாக உங்களுடன் நெருக்கமாக பழகி, உங்கள் அன்பையும் ஆதரவையும் அனுபவித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாகும். தமிழின் பெருமையும் தமிழ் மக்களின் பண்பாடும் என்னை ஆழமாக கவர்ந்தன. வாழ்க்கையின் ஓட்டத்தில் இப்போது உங்களிடமிருந்து பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், உங்களுடன் கழித்த இந்த நாட்கள் என் வாழ்வின் பொற்காலமாகவே நினைவில் நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கவர்னராக பொறுப்பேற்றபோது, கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத சூழல் நிலவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் அவரை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றபோது, சாதாரண மக்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடமும் அன்பும் உற்சாகமும் நிரம்பிய நட்பான அணுகுமுறையை கண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எங்கு சென்றாலும் மக்களின் புன்னகை மற்றும் அன்பான வரவேற்பு அவருக்கு மகிழ்ச்சியளித்ததாக கூறியுள்ளார். இந்த அனுபவங்கள் தன்னை ஒரு பெரிய தமிழ் குடும்பத்தின் உறுப்பினராக உணர வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியின் செழுமை, சங்க இலக்கிய மரபுகள், திருவள்ளுவரின் சிந்தனைகள் மற்றும் சமகால இலக்கியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை நேரடியாக அறிந்தது தனது வாழ்க்கையில் முக்கியமான அனுபவமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய தருணங்கள் தனது அறிவையும் அனுபவத்தையும் மேலும் வளப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தபோது தமிழ்நாட்டு மக்களின் அயராத உழைப்பும் அவர்களின் வாழ்க்கை உற்சாகமும் தன்னை ஆழமாக கவர்ந்ததாக அவர் தெரிவித்தார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு ஊர்களில் மக்களுடன் சந்தித்து உரையாடியதாகவும், அவர்களின் உழைப்பில் உள்ள மகிழ்ச்சி மற்றும் அறிவு முதிர்ச்சி தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் கோயில்கள், சிற்பங்கள், சுவரோவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் இந்திய பண்பாட்டு மரபின் முக்கியமான பொக்கிஷங்களாக உள்ளன என்றும், அவற்றை பாதுகாப்பது மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவற்றை மேலும் ஆய்வு செய்து உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்ட பலர் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, திருப்பூர் குமரன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பலர் சமூக மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தனது பதவிக்காலத்தில் கிடைத்த அனுபவங்கள் மிகவும் அரிய மற்றும் வளமான அனுபவங்களாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது தமிழக மக்கள் காட்டிய அன்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தமிழ்நாட்டு மக்களின் அன்புக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக என்றும் பிரார்த்திப்பதாகவும் கவர்னர் ஆர்.என். ரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.