துபாய்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். திரைப்படங்களில் இருந்து ஓரளவு விலகி, கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வரும் அவர், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு பந்தய உலகில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் அஜித் குமார், ‘அஜித் குமார் ரேசிங்’ என்ற பெயரில் தனது சொந்த கார் பந்தய அணியை தொடங்கியுள்ளார்.

இந்த கார் பந்தய அணி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று சிறப்பான சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து அஜித் குமார் ரேசிங் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச கார் பந்தய அரங்கில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளதாக ரசிகர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது. அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் தனது அணியினருடன் அஜித் குமார் பங்கேற்றுள்ளார். தற்போது, 24 ஹெச் சீரிஸ் – மத்திய கிழக்கு டிராபிக்கான கார் பந்தயத்தில் அவர் கலந்து கொண்டு போட்டியிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய லீ மேன்ஸ் கார் ரேசிங் போட்டியிலும் அஜித் குமார் பங்கேற்று வருகிறார். ஒரு பக்கம் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருவதாலும், மறுபக்கம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் சந்திப்புகளாலும், அஜித் குமார் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். துபாயில் உள்ள அஜித் குமாரை அடிக்கடி தமிழ் திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்து வருகின்றனர்.

சமீப காலமாக இசையமைப்பாளர் அனிருத், ஜி.வி.பிரகாஷ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் மற்றும் நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் அஜித் குமாரை துபாயில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்புகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அஜித் குமாரை சந்தித்துள்ளார். ரேசிங் டி-ஷர்ட் மற்றும் சாம்பல் நிற தொப்பி அணிந்திருந்த அஜித் குமாருடன், வெங்கட் பிரபு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.

குறிப்பாக, இயக்குநர் வெங்கட் பிரபு – நடிகர் அஜித் குமார் கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம், தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக கருதப்படுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த ‘மங்காத்தா’ திரைப்படம் கடந்த 23ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த ரீ-ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மீண்டும் திரையரங்குகளில் வெளியான ‘மங்காத்தா’ படம், ரீ-ரிலீஸிலேயே ரூ.25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அஜித் குமாரின் ரசிகர் ஆதரவும், ‘மங்காத்தா’ படத்தின் தாக்கமும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.