புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பின்னர் ஈரான் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து எழுந்த கேள்விகளுக்கு இஸ்ரேல் தூதர் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடியின் பயணத்துக்கும் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடி இஸ்ரேல் பயணத்தை முடித்து சென்றதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது. அந்த இரு நிகழ்வுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல. ஈரான் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை எடுத்த முடிவு பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகே வந்தது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரான் மீது நேரடியாக படையெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும் அவர் கூறினார். ராணுவ தாக்குதல் மூலம் அல்லாமல், உள்நாட்டு அழுத்தத்தின் மூலம் ஈரானில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணமே இருந்ததாகவும் அவர் விளக்கினார்.
ஈரான் மக்களுக்கே தங்களுடைய நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என்றும் அவர் கூறினார். கொள்கைகளில் மாற்றம் தேவைப்படுகிறதா அல்லது ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுகிறதா என்பதை பார்க்கும் சூழல் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்று அவர் தெரிவித்தார்.
அதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார். அந்த முயற்சி வெற்றி பெறுமா அல்லது இல்லையா என்பதை கவனித்துக் கொண்டே இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஈரானில் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஈரான் மக்களின் நலன் மட்டுமல்லாமல் முழு மேற்காசியா பகுதியும் எதிர்காலத்தில் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார். அந்த பகுதி நிலையானதாக இருந்தால் வளைகுடா நாடுகளுக்கும் அதன் மூலம் உலகளாவிய சமூகத்திற்கும் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் இஸ்ரேல் நாட்டிற்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கொண்ட குழுவும் அவருடன் சென்றிருந்தது.
இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி சென்றடைந்தபோது அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று அவரை வரவேற்றார். இந்த வரவேற்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. அப்போது நெதன்யாகுவின் மனைவி சாராவும் அங்கு உடன் இருந்தார்.
பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது இரண்டாவது முறை ஆகும். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.
பின்னர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரை அங்கிருந்த உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவங்களில் ஒன்றான சபாநாயகர் பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த கௌரவத்தை வழங்கினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் இந்த உயரிய பதக்கத்தை பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். மேலும் அந்த நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற வரலாற்றுப் பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.