சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. வேட்புமனு தாக்கல் கடந்த 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும், அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த சூழலில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன. குறிப்பாக கூட்டணிகள் தங்களது வாக்கு வங்கியை வலுப்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.
அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம் மற்றும் கிள்ளியூர் ஆகியவை அந்த தொகுதிகள் ஆகும். இந்த அனைத்து தொகுதிகளிலும் பாஜக சின்னமான தாமரையில் போட்டியிடுவதாக தமகா தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜி.கே. வாசன் தனது தேர்தல் பிரசாரத்தை நாளை முதல் தொடங்க உள்ளார். அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி கும்பகோணத்தில் அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிக்கிறார். தொடர்ந்து 7ஆம் தேதி திருவையாறு, அரியலூர், லால்குடி ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடைபெறும்.
ஏப்ரல் 8ஆம் தேதி நன்னிலம், மன்னார்குடி, பாபநாசம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற உள்ளது. 10ஆம் தேதி சாத்தூர் மற்றும் கிள்ளியூர் பகுதிகளில் பிரசாரம் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 11ஆம் தேதி ராணிப்பேட்டை, 12ஆம் தேதி மீண்டும் கும்பகோணம், 13ஆம் தேதி ஈரோடு மேற்கு ஆகிய பகுதிகளில் பிரசாரம் நடைபெறும்.
மேலும், 14ஆம் தேதி திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம், 15ஆம் தேதி கிள்ளியூர், 16ஆம் தேதி தருமபுரி, எடப்பாடி, குமாரப்பாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெறும். 17ஆம் தேதி அவிநாசி, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, ஈரோடு மேற்கு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனுடன், 18ஆம் தேதி நத்தம் மற்றும் ஒட்டன்சத்திரம், 19 மற்றும் 20ஆம் தேதிகளில் கும்பகோணம் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளில் பிரசாரம் நடைபெறும். இறுதியாக, ஏப்ரல் 21ஆம் தேதி சென்னை நகரின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளில் ஜி.கே. வாசன் தனது பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.
மொத்தத்தில், மாநிலம் முழுவதும் திட்டமிட்டுள்ள இந்த பிரசார சுற்றுப்பயணம், தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.