புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள்: சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை:
வருகிற புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக, சென்னை போலீஸ் விரிவான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அருண் உத்தரவின் பேரில், சென்னை முழுவதும் பல அடுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை நகரின் கடற்கரை பகுதிகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள், வணிக மையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 19,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், அவர்களுக்கு துணையாக 1,500 ஊர்காவல் படையினரும் பணியில் ஈடுபட உள்ளனர். டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணி முதல் பாதுகாப்பு பணிகள் தொடங்கும்.

மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, பரங்கிமலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட 12 போலீஸ் மாவட்டங்களில் மொத்தம் 425 இடங்களில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.

மேலும், இருசக்கர வாகனங்களில் நடைபெறும் ‘பைக் ரேஸ்’ போன்ற ஆபத்தான செயல்களைத் தடுக்க 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளன. இதனுடன் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 31 மாலை முதல் ஜனவரி 1 வரை, பொதுமக்கள் கடலில் குளிக்கவோ, இறங்கி விளையாடவோ அனுமதி இல்லை. இதையொட்டி மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை, திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குதிரைப்படை போலீசார், கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் நீச்சல் படையினர் தயார் நிலையில் இருப்பார்கள். டிரோன் கேமராக்கள் மூலமும் கடற்கரை பகுதிகள் கண்காணிக்கப்படும்.

நட்சத்திர ஓட்டல்களில் கடும் கட்டுப்பாடுகள்

புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்களில் நடைபெறும் ஆட்டம், பாட்டம் மற்றும் கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓட்டல் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு, விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கவும், மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட்டாசு, ஒலிபெருக்கி தடை

புத்தாண்டு கொண்டாட்டங்களில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கைது செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், இதனால் வேலைவாய்ப்பு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றில் எதிர்கால பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டை கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.