சென்னை:
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட சந்தைக் கட்டணத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.500 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண் விற்பனைத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 27 மாவட்ட விற்பனைக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள் மறைமுக ஏல முறையில் விற்பனை செய்யப்படுவதுடன், உழவர்களுக்கு சிறந்த விலை கிடைக்கச் செய்வதே அவற்றின் நோக்கமாகும். இதற்காக உழவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வணிகர்களிடமிருந்து மொத்த மதிப்பின் 1 சதவீதம் சந்தைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏல முறையை முறையாக பின்பற்றாமல், சில இடங்களில் வணிகர்களுடன் கூட்டணி அமைத்து உழவர்களுக்கு குறைவான விலையே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் உழவர்கள் இரட்டைப் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
மேலும், 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி ரூ.5 லட்சம் அல்லது அதற்கு குறைவான தொகையை விற்பனைக் குழுக்கள் நேரடியாக செலவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை பயன்படுத்தி பல பணிகள் ரூ.5 லட்சம் அளவுக்குள் பிரிக்கப்பட்டு கணக்கில் காட்டப்பட்டு, பெருமளவு நிதி முறைகேடுகள் செய்யப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக அவர் கூறினார்.
கோவை மாவட்ட சந்தைக் குழு இதற்கான முக்கிய உதாரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலிருந்து கிடைக்கும் சந்தைக் கட்டணம் மற்றும் வாடகை வருவாயை சேர்த்து 2021 முதல் 2025 வரை நான்கு ஆண்டுகளில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.76 கோடிக்கும் மேற்பட்ட தொகை செலவிடப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
இந்த செலவுகள் பெரும்பாலும் சுற்றுச்சுவர் கட்டுதல், சிமெண்ட் தளம் அமைத்தல், மின்சாரம் தொடர்பான பராமரிப்பு, வண்ணம் பூசுதல் போன்ற பணிகளுக்காக சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில இடங்களில் பணிகள் முறையாக நடைபெறாமல் இருந்தும், கணக்கில் அதிக தொகை செலவழிக்கப்பட்டதாகக் காட்டப்பட்டதாகவும் உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுபோன்ற முறைகேடுகள் கோவை மாவட்டத்தைத் தவிர மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.500 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருக்கலாம் என உழவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இந்த அளவிலான தொகையை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கிடங்குகளை அமைக்க முடிந்திருக்கும். அவ்வாறு செய்திருந்தால், நேரடி கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
உழவர்களின் உழைப்பால் கிடைக்கும் வருவாயிலிருந்து வசூலிக்கப்படும் சந்தைக் கட்டணத்தை அவர்களுக்கே பயன்படும் வகையில் செலவிடாமல், முறைகேடாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள 27 விற்பனைக்குழுக்களிலும் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.