தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம் – நகை சந்தையில் பரபரப்பு
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக விலை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்து இரு உலோகங்களும் தொடர்ந்து ஏற்றுமுகத்தில் பயணிக்கின்றன.
அக்டோபர் மாதம் வரை தங்கம், வெள்ளி விலை ‘கிடுகிடு’வென உயர்ந்திருந்தாலும், நவம்பர் மாதத்தில் சற்று குறைந்தது. ஆனால் டிசம்பர் தொடக்கத்திலிருந்து மீண்டும் விலை பாய்ந்து, புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் நிலைத்திருந்தது. வெள்ளி விலையோ ‘டாப் கியர்’ போட்டு பறந்தது.
நேற்று முன்தினம் வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8, கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் கிராமுக்கு ரூ.2, கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன்பு அக்டோபர் 15-ந்தேதி ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டிருந்தது. தற்போது அதனைத் தாண்டி வரலாற்று சாதனையைப் பதிவு செய்துள்ளது. வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவைகளுக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அதன் தேவை அதிகரித்து விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளது.
தங்கம் விலையும் அதேபோல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று கிராமுக்கு ரூ.20, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,050க்கும், ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. கிராமுக்கு ரூ.200, சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,250க்கும், ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மாலை நேரத்தில் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு அதிர்ச்சியாக தங்கம் விலை மேலும் உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.98,960க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கு விற்பனை செய்யப்பட்டது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் ரூ.960 உயர்வும் பதிவானது.
வெள்ளி விலையும் அதே நாளில் கிராமுக்கு ரூ.1, கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.216க்கும், ஒரு கிலோ ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலை உயர்வுகள் நகை சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நகை வியாபாரிகள் மற்றும் நகைபிரியர்கள், விலை மேலும் ஏறுமா அல்லது குறையுமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.