Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

தங்கம் விலை மீண்டும் பாய்ந்தது: இன்று பிற்பகலில் ரூ.1 லட்சத்தை கடந்த புதிய உச்சம்

சென்னையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏற்றத்தாழ்வுகளுடன் நகர்ந்த தங்கம் விலை, இன்று மட்டும் இரண்டு முறை உயர்ந்து புதிய சாதனையை எட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 17-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டு அப்போது புதிய உச்சத்தை தொட்டது. அந்நேரத்தில் தங்கம் விலை விரைவில் ரூ.1 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு, நவம்பர் 5-ந்தேதி ஒரு சவரன் ரூ.89,440-க்கு குறைந்தது. விலை தொடர்ந்து குறைந்தால் நுகர்வோருக்கு நிம்மதி கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்த நேரத்தில், மீண்டும் தங்கம் விலை ஏற்றப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.

டிசம்பர் 12-ந்தேதி தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டு, ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றமின்றி நிலைத்திருந்த நிலையில், இன்று காலை தங்கம் திடீரென உயர்ந்து ரூ.1 லட்சத்தை நெருங்கியது. காலை நேரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,460-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில், இன்று பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, நிபுணர்கள் முன்கூட்டியே கணித்தபடி, சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பிற்பகலில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துடன் வெள்ளி விலையும் உயர்வு பாதையில் உள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், உக்ரைன்–ரஷியா போர், உலக நாடுகளின் மைய வங்கிகள் தங்கத்தை அதிகமாக குவிப்பது போன்ற காரணிகள் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. உலகளாவிய அச்சங்கள் அதிகரிக்கும் போதெல்லாம் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், அதன் தேவை அதிகரித்து விலையும் உயர்கிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாதாரண மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் “இனி தங்கம் வாங்குவது கனவாகிவிடுமோ?” என்ற கவலையில் உள்ளனர். திருமணங்கள், விழாக்கள் போன்ற நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்கும் குடும்பங்கள் அதிக சுமையை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத நிலையாகி வருகிறது.