எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஜய் அறிவுரை
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சூழ்ச்சிகளையும் எதிர்ப்புகளையும் மீறி மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது: “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தினோம். குறிப்பாக ஈரோடு நிகழ்வில், இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத அளவிலான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதிகாரத்தின் முகமூடியின் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு, மக்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களுக்காக குரல் கொடுத்தோம்.
நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் அதிக பாசத்துடன் இணைந்திருப்பதைப் பார்த்து திகைத்தனர். கூட்டம் சேர்க்க இயலாது என்று எழுதியவர்களே, கூட்டம் பெருகுகிறது என்று பின்னர் எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் முரணான எழுத்துக்கள், அவர்களையே வெளிப்படுத்தியது.
அதேபோல், முன்னேற்றக் கழகத்தினர் நம்மீது அவதூறு சுமத்த முயன்றபோது, தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர். அவர்களது தலைவர், பழைய அடிமை, புதிய அடிமை என்று பேசி, யாரை குறிக்கிறார் என்பதை மறந்து தங்கள் சொந்த நிலையை வெளிப்படுத்தினார். 1999 முதல் 2003 வரை தாமரை மலருக்குத் தரிசனம் செய்த காலத்தை மறைக்க முடியாமல், மனதில் இருந்ததை வெளிப்படுத்தியதாகவே தெரிகிறது.
இன்று மக்கள் எங்கும் நம்மை வரவேற்கின்றனர். வாக்குச்சாவடிகளிலும் அதே உறுதியுடன் நமக்காக நிற்பார்கள். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் நம்முடன் உறுதியாக இணைந்துள்ளனர். இதை உணர்ந்ததால் தான் எதிரிகள் விவகாரமாகப் பேசுகிறார்கள்.
எதிரிகளின் ஏசுதலையும் புறந்தள்ளி, மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதே நம் கடமை. தமிழக வெற்றிக் கழகம் என்பது தகுதி, தரம், கட்டுப்பாடு, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் படை என்பதை தரணிக்கு உணர்த்த வேண்டும்.
வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். புதிய வாக்காளர்களில் ஒருவரும் விடுபடாமல் சேர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியமான பொக்கிஷம். அந்த வாக்குகள் அனைத்தும் த.வெ.க. சின்னத்திற்காக பதிவு செய்யப்பட வேண்டும்.
செயல்மொழியே நமது அரசியலின் தாய்மொழி. அதனை மனதில் கொண்டு தொடர்ந்து, தொய்வின்றி, துரிதமாக களமாடுங்கள். விவேகம் விசாலமாகட்டும். வெற்றி நம் விலாசமாகட்டும். வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்.”