புதுடில்லி: ஜம்மு–காஷ்மீர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பயங்கரவாதிகளை இனி தனித் தனியாக, வெவ்வேறு சிறைகளில் அடைக்க அதிகாரிகள் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
டில்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் இடம்பெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 12 பொதுமக்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தது. தற்கொலைப்படையாக நடந்த இந்தத் தாக்குதலை நடத்திய உமர் நபி, புல்வாமாவைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காஷ்மீரை சேர்ந்த பலரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவில் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு, தங்களின் ஆதரவாளர்களிடமிருந்து நிதி திரட்டிவந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் சதி திட்டங்களில், வரும் டிசம்பர் 6-ஆம் தேதி—பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளில்—டில்லியில் மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் பிளான் முக்கியமானதாக இருந்தது.
இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு–காஷ்மீர் சிறைகளில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும், காஷ்மீர் அடிப்படையிலான பயங்கரவாதிகளையும் ஒரே இடத்தில் வைக்காமல், வேறு வேறு சிறைகளில் மாற்றி அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அவர்கள் ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாறிக் கொள்ளுதல், தாக்குதல் சதி திட்டங்களைச் சேர்ந்து தீட்டுதல் போன்றவை தடுக்கப்பட உள்ளன. மேலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் தற்கொலைப்படைச் செல் உறுப்பினர்களை தங்களது வலையில் சிக்கவைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் குறைக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

