பவன் கல்யாண் பிரதமராகினாலும் ஆச்சரியமில்லை – நடிகை நிதி அகர்வால் புகழாரம்
சென்னை,
சினிமாவில் இருந்து அரசியலுக்கு நடிகர் பவன் கல்யாண் மாறியது திடீர் முடிவாகத் தெரியவில்லை என்றும், அவரது அரசியல் பயணம் நீண்டகால பொது வாழ்க்கையின் இயல்பான தொடர்ச்சியே என்றும் நடிகை நிதி அகர்வால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பவன் கல்யாண் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாலிவுட் படமான ‘முன்னா மைக்கேல்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால், அதன் பின்னர் தெலுங்கு திரையுலகில் கால்பதித்தார். தொடர்ந்து பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்த அவர், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ மற்றும் ரவி மோகனுடன் நடித்த ‘பூமி’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானார். பவன் கல்யாணுடன் இணைந்து ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படத்தில் நடித்த பிறகு, தன்னுடைய திரைவாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியதாக நிதி அகர்வால் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அண்மையில் பிரபாஸ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்திருந்த நிதி அகர்வால், அந்த படம் ரூ.300 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில், பவன் கல்யாண் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் அரசியல் ரீதியாகவும் திரையுலக வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் நிதி அகர்வால் கூறுகையில், “பவன் கல்யாண் ஒரு ஒழுக்கமான மனிதர். அவரது நோக்கம், தெளிவு மற்றும் மக்களுடனான தொடர்பு மிகவும் வலுவானது. அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக மாறினாலும் எனக்கு ஆச்சரியமில்லை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு அவர் மாறியது ஒரு திடீர் அல்லது திட்டமிடப்படாத மாற்றமாக எனக்குத் தோன்றவில்லை” என தெரிவித்தார்.
மேலும், “1990-களில் தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடவும், அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளவும் உதவியுள்ளது. இந்த அனுபவங்களே அவரது அரசியல் பயணத்துக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன. சினிமா மூலம் பெற்ற மக்கள் தொடர்பு, அரசியலில் அவருக்கு பெரும் பலமாக மாறியுள்ளது” என்றும் நிதி அகர்வால் குறிப்பிட்டார்.
நடிகையின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம், பவன் கல்யாணின் அரசியல் பயணத்தை பாராட்டும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த கருத்துகளை வரவேற்று வருகின்றனர். மறுபுறம், நடிகை அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பது சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனால், நிதி அகர்வாலின் பேட்டி தற்போது இணையத்தில் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பவன் கல்யாண் தற்போது ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி, குறுகிய காலத்திலேயே மாநில அரசின் முக்கிய பதவியை அடைந்துள்ள அவரது பயணம், தேசிய அரசியலில் கூட அவருக்கான எதிர்கால வாய்ப்புகளை உருவாக்குமா என்ற கேள்வியை இந்த கருத்துகள் மீண்டும் எழுப்பியுள்ளன.