இந்தியாவில் விளையாட மாட்டோம் – வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் உறுதி
டாக்கா,
இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாது என வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முஷ்தபிசுர் ரகுமான் விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியா–வங்காளதேச கிரிக்கெட் உறவில் உருவானுள்ள பதற்றம் தற்போது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வங்காளதேசத்தில் சமீப காலமாக இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், ஐ.பி.எல். தொடரில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசுர் ரகுமான் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பல்வேறு இந்து அமைப்புகள், வங்காளதேச வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடக் கூடாது எனக் கண்டனம் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக, கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கொல்கத்தா அணி நிர்வாகம் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிப்பதாக அறிவித்தது. எந்தவிதமான நேரடி காரணமும் இன்றி தங்கள் நாட்டு வீரர் ஐ.பி.எல். அணியில் இருந்து நீக்கப்பட்டதாக வங்காளதேசம் கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு செல்லமாட்டோம் என வங்காளதேசம் போர்க்கொடி தூக்கியது. அதுமட்டுமின்றி, வங்காளதேசத்தில் ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. மேலும், தங்கள் அணிக்குரிய உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு பதிலாக இலங்கையில் நடத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) வங்காளதேச கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியது.
ஆனால், வங்காளதேசத்தின் இந்தக் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்தது. இதையடுத்து, இரண்டாவது முறையாகவும் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வங்காளதேசம் மீண்டும் வலியுறுத்தியது. தங்களது முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த ஐ.சி.சி., ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என திட்டவட்டமாக கூறிவிட்டது. மேலும், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வங்காளதேச அணி இந்தியா வருவது குறித்து இறுதி முடிவை எடுக்குமாறு ஐ.சி.சி. கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. போர்டு இயக்குநர்கள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். இதில், வங்காளதேசத்தின் கோரிக்கை முழுமையாக நிராகரிக்கப்பட்டது. மேலும், வங்காளதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால், அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்க்கும் யோசனைக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் சம்மதம் தெரிவித்தனர். 15 இயக்குநர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனையில், பாகிஸ்தான் மட்டும் வங்காளதேசத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல், “நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்புகிறோம். ஆனால், இந்தியாவில் விளையாட மாட்டோம். இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். முஷ்தபிசுர் ரகுமான் விவகாரம் தனிப்பட்ட பிரச்சினை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால், டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணியின் பங்கேற்பு குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட் அரசியலிலும் இந்த விவகாரம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.