சென்னை,
புதுச்சேரி மற்றும் கேரளாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, பல்வேறு தேசிய தலைவர்கள் அந்த மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் நாளை மதியம் 3.15 மணியளவில் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வர உள்ளார். அங்கிருந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்ல உள்ளார்.
புதுச்சேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார். பின்னர் மாலை 6.10 மணியளவில் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்ப உள்ளார். சென்னை வருகையின் போது பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.
இதேபோல், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் நாளை காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையம் வர உள்ளார். அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்க உள்ளனர். தொடர்ந்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார்.
அதனைத் தொடர்ந்து, சிறிய ரக விமானம் மூலம் புதுச்சேரி புறப்படும் ராகுல் காந்தி, அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் கேரள மாநிலம் பாலக்காடு சென்று அங்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார். தனது பயணத்தை முடித்து மீண்டும் டெல்லி திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சென்னை வருகை தருவதால், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில், தேசிய அரசியல் தலைவர்கள் நேரடியாக களமிறங்குவதால் புதுச்சேரி மற்றும் கேரள தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.