சென்னை,
தமிழகத்திற்கு ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பல்வேறு முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து வருகின்றார். அதன்படி, இன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்களில் முக்கியமாக நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் சுமார் 8.8 லட்சம் வீடுகளுக்கும் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும். இதன் மூலம் அந்த பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி பயன்பாடு அதிகரிக்கும் என்றும் மக்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மணலி பகுதியில் ரூ.1,490 கோடி மதிப்பில் மசகு எண்ணெய் கலவை ஆலை அமைக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கட்டமைப்பு திட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் கங்கைகொண்ட சோழபுரம் அருகே புதிய பசுமை புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்த திட்டம் நிறைவேறிய பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து வசதி மேம்படும் என்றும் நெரிசல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிராமப்புற வளர்ச்சியை முன்னேற்றும் நோக்கில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 370 கிலோமீட்டர் நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் மூலம் பல கிராமங்கள் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டு போக்குவரத்து வசதி மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஐந்து புதிய ரெயில் சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி திருநெல்வேலி – மங்களூர் விரைவு ரெயில், ராமேஸ்வரம் – மங்களூர் விரைவு ரெயில், மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரெயில், நாகர்கோவில் – சர்லாப்பள்ளி அம்ரித் பாரத் ரெயில் மற்றும் கோவை – தன்பாத் அம்ரித் பாரத் ரெயில் ஆகிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த அனைத்து திட்டங்களும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 நாட்களுக்குள் மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தந்து ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.