கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர்நிலைகளில் குளிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குளிக்கும் போது வாய் மற்றும் மூக்கை கட்டாயமாக மூடி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அமீபா தாக்குதலில் 36 பேர் பலி
குளங்கள் மற்றும் குட்டைகளில் வாழும் ஒரு வகை அமீபா, வாய் அல்லது மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளை காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் கேரளாவில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்டல–மகர விளக்கு சீசன் தொடங்கியுள்ளதால், சபரிமலையில் பெருமளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் புதிய பாதுகாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளவை:
வாய்–மூக்கை மூடி குளிக்க வேண்டும்
சபரிமலையில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்கும் போது பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
அமீபா தாக்குதலைத் தவிர்க்க, குளிக்கும் போதே வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடி கவனமாக செயல்பட வேண்டும்.
குளித்த பிறகு பயன்படுத்திய துணியை நன்றாக உதறி, பின்னர் தலை–முகத்தை துடைக்க வேண்டும்.
கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும்.
சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள்
சபரிமலையில் திறந்த வெளிகளில் மலம் கழிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் சுகாதாரக் கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடன் இணைந்து, பெருமளவு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணத்திற்கு முன் லேசான நடைப்பயிற்சி செய்யவும்; மலை ஏறும் போது அதிக சோர்வு, மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவ உதவி பெற வேண்டும்.
அவசர உதவிக்கான ஹெல்ப்லைன்: 04735-203232
மருத்துவ வசதிகள் – விரிவான ஏற்பாடுகள்
கோந்நி அரசு மருத்துவக் கல்லூரி இந்த சீசனில் முதன்மை மருத்துவ மையமாக செயல்படும்; இதில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகள் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வசதி செய்து வைக்கப்பட்டுள்ளது.
நிலக்கல், பம்பை மருத்துவ மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
சன்னிதானம், பம்பை உள்ளிட்ட இடங்களில் அவசர இதய சிகிச்சை மையங்கள் உள்ளன.
பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரை பகுதிகளில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும்.
ஓட்டல், உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

