பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி, கட்சித் தொண்டர்களை சந்தித்து இந்த வெற்றியை கொண்டாடினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் விரைவில் இன்னொரு பெரிய பிளவை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்கு அசோக் கெலாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்ததாவது:
“காங்கிரஸ் கட்சி பிளவு படும் என பிரதமர் மோடி கனவு காண்கிறார். அவர் கூறும் கருத்துகள் அடிப்படையற்றவை. காங்கிரஸைப் பற்றி பேசுவதற்கு முன், பிரதமர் மோடி முதலில் தனது சொந்த வீட்டைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஆனாலும், பாஜக இன்னும் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் தவிக்கிறது. இதற்குக் காரணம் பாஜக–ஆர்எஸ்எஸ் இடையிலான உள்ளக மோதல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி முழுமையான ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நாட்டிற்கு ஏற்படுத்திய சவால்களை சமாளிக்கும் திறன் மூத்த மற்றும் இளம் தலைவர்களிடமும் உள்ளது.”
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.