திமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவின் ‘ஆசை’ வலை? திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “திமுகவுடன் பாஜக மறைமுகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. ‘தொகுதி மறுவரையறையை நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள்; நாங்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையைக் கொண்டு வருகிறோம். இதன் மூலம் 2029-லேயே தேர்தல் வந்துவிடும், நீங்கள் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை’ என்று கூறி பாஜக திமுகவுக்கு ஆசை காட்டுகிறது” என்று தனது புரிதலைத் தெரிவித்தார்.

எச்சரிக்கையும் விபரீதமும் பாஜகவின் இந்தத் திட்டத்தை திமுக ஒருவேளை பின்பற்றினால், அதுவே அவர்களுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் என்று எச்சரித்த கார்த்தி சிதம்பரம், “இந்தத் தேர்தலில் வந்த முடிவுகளை விட மிக மோசமான விளைவுகளைத் திமுக சந்திக்க நேரிடும். திமுக தங்களின் தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் விபரீதங்கள் அதிகரிக்கும்” என்றார்.

தவெக மற்றும் அரசியல் சூழல் தமிழக அரசியலில் தற்போது தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்த கருத்துடன் பயணிப்பதாகத் தெரிவித்தார். மேலும், தவெகவின் அரசியல் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்துக் கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், தவெக ஆட்சியை நடத்த எந்த எம்எல்ஏக்களையும் தன்பக்கம் இழுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்கள் சுயமாகச் செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த கருத்துக்கள் வரும் காலங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.