சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், தவெக அரசின் நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்குக் காட்டமான பதிலடிகளை வழங்கினார்.
நீட் தேர்வு விவகாரம் நீட் தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை என்பதில் தவெக அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த நிர்மல் குமார், “இந்தத் தேர்வு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதிரானது. நீட் தேர்வை மத்திய அரசால் மட்டுமே தடுக்க முடியும். கடந்த காலங்களைப் போல பொய்யான வாக்குறுதிகளை எங்களால் அளிக்க முடியாது; மத்திய அரசுதான் இதற்கு ஒரு முடிவைக் கொண்டு வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
எம்எல்ஏ மீதான வழக்கு குறித்த விளக்கம் விளாத்திகுளம் எம்எல்ஏ மீது எடுக்கப்பட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “எம்எல்ஏ ஒருவர் மேடையில் அவதூறாகவும் மிரட்டும் வகையிலும் பேசினால், அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இது பொதுமக்கள் மற்றும் தவெகவினர் மத்தியில் பெரிய கைகலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் வழக்குகள் பதியப்படுவது இயல்பான ஒன்றுதான், இதில் விதிமீறல்கள் ஏதுமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
திமுக மீது விமர்சனம் திமுக ஆட்சிக்காலத்தை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார், “தங்கள் ஆட்சியில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டவர்கள் மற்றும் ட்வீட் போட்டவர்கள் மீது கூட குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட்டது. முதல்வருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயது மூதாட்டியைக் கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாப்பிள்ளை, மகன் என முதல்வரைச் விமர்சித்தவர்கள் மீது குண்டாஸ் பாய்ந்தது” என்று திமுகவின் கடந்த கால செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தார்.
மேலும், தங்கள் கட்சியினர் அதிமுகவிலிருந்து வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், “எங்கள் எம்எல்ஏவிடம் பேரம் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்களாக யாரையும் அணுகவில்லை, அவர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு வந்தனர்” என்றும் விளக்கமளித்தார்.