தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிருக்கான காப்பீட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“தமிழகம் முழுவதும் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 6.27 லட்சம் விவசாயிகள் 15 லட்சம் ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்து உள்ளனர். இது மொத்த சாகுபடி பரப்பளவில் 57% ஆகும். கடந்த ஆண்டு இதே நேரத்தில் 10 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டிருந்தது.
27 மாவட்டங்களில் கால அவகாசம்
முந்தைய அறிவிப்பின் படி தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் சம்பா நெலுக்கான காப்பீடு செய்யும் கடைசி தேதி நவம்பர் 15 என அறிவிக்கப்பட்டிருந்தது.”
பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குறுவை நெல் அறுவடைவும், சம்பா நெல் நடவும் தாமதமானது. மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்ததால், அடங்கல் வழங்கும் பணிகளும் தாமதமடைந்தன. இதனால் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யும் காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, சம்பா, தாளடி மற்றும் பிசானம் நெற்பயிர்களுக்கான காப்பீட்டு விண்ணப்ப காலத்தை இந்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள், தேவையான ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.