மதுரை,

சாத்தான்குளம் தந்தை–மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியுமா, ஜாமீன் பெற முடியுமா என்ற கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கறிஞர் ஜெயசிங் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனையை விதித்துள்ளதாக தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.24 லட்சம், பாலகிருஷ்ணனுக்கு ரூ.16.80 லட்சம், ரகு கணேஷுக்கு ரூ.5.20 லட்சம், முருகனுக்கு ரூ.10.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோருக்கும் தனித்தனியாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த தொகைகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட பெனிக்ஸ் தாயாருக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால், குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை “அரிதிலும் அரிதானது” என நீதிபதி குறிப்பிடுகிறார். ஆயுதமில்லாத தந்தை, மகன் இருவரையும் காவல் துறையினர் தாக்கி கொன்ற சம்பவம் மனித கண்ணியத்தையே மீறுவதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையே இப்படியான குற்றத்தை செய்திருப்பது மிகக் கடுமையானதாக கருதப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தும், திட்டமிட்டு செயல்பட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் மீது கருணை காட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இந்த தீர்ப்பு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு குறித்து விளக்கமளித்த வழக்கறிஞர் ஜெயசிங், “இந்த நாட்டில் எந்த தீர்ப்புக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உள்ளது. அதேபோல், இந்த 9 பேரும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்” என்றார்.

ஆனால், நீதிபதி வழங்கிய தீர்ப்பு மிக வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளும் உச்சபட்ச தண்டனை கோரியுள்ள நிலையில், மேல்முறையீட்டிலும் தீர்ப்பு மாற வாய்ப்பு மிகவும் குறைவு என அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கில் ஜாமீன் பெறுவது சாத்தியமில்லை என்றும், மேல்முறையீட்டு விசாரணை நடைபெறும் காலத்திலும் குற்றவாளிகள் வெளியே வர முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மொத்தத்தில், சாத்தான்குளம் வழக்கில் தண்டனை பெற்ற போலீசாருக்கு மேல்முறையீட்டு உரிமை இருந்தாலும், தண்டனையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.