கவுகாத்தி / குருகிராம்:

அரியானா மாநிலத்தில் இளம் வங்கி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான மஹக், குருகிராமில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆடிட்டிங் பணியில் ஈடுபட்டு வந்த அன்சுல் தவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன நிலையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிப்ரவரி 15 ஆம் தேதி, மனைவியை காரில் வெளியில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி அன்சுல் வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். அவர்கள் வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், அன்சுல் காவல்துறைக்கு அழைத்து, அடையாளம் தெரியாத கொள்ளைக் கும்பல் தாக்கி மனைவியை கொன்றுவிட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மஹக் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து, போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

முதலில் கொள்ளை சம்பவம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டாலும், அன்சுலின் விளக்கங்களில் முரண்பாடுகள் இருப்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் கூறிய நேர விவரங்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த சூழ்நிலைகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தவில்லை. இதையடுத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கினர்.

தொடர்ந்த விசாரணையில், அன்சுல் இறுதியில் மனைவியை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மனைவி மீது சந்தேகம் இருந்ததாகவும், இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவ நாளிலும் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையாக மாறியதாக கூறியுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் கத்தியால் கழுத்தை அறுத்து கொள்ளை நடந்தது போல காட்சியமைத்ததாகவும் போலீசார் முன் தெரிவித்துள்ளார். சம்பவத்தை கொள்ளை என சித்தரித்து தப்பிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், மஹக் கர்ப்பிணியாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் வெளியானதும், சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அன்சுல் தவான் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்தின் முழு பின்னணியை ஆராய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம் வயதிலேயே உயிரிழந்த மஹக்கின் மரணம், குடும்ப வன்முறை மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.