காஞ்சிபுரத்தில் பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற கும்பல் – 5 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சியின் பரத்வாஜ் நகர் பகுதியில் வசித்து வரும் ஓம்சக்தி செல்வமணி (50) பா.ஜனதா கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக உள்ளார். முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் விழாவையொட்டி, தொகுதிக்குள் பல்வேறு கிராமங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது திடீரென 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் செல்வமணியை தாக்க முயன்றது. அவரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்ட அவர்கள், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கினர். சாமர்த்தியமாக தப்பித்த செல்வமணி உடனே வீட்டுக்குள் ஓடி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் வீட்டின் கதவை உடைக்க முயன்றது. முடியாத நிலையில், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர்.
வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை கவனித்த மர்ம நபர்கள், அவற்றை உடைத்து சூறையாடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது செல்வமணியின் மனைவி, மகள், மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குள் இருந்ததால், சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக செல்வமணி மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடத் தொடங்கினர். விசாரணையின் போது சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பிரகாஷ், யோகேஸ்வரன், சஞ்சய், தினேஷ்குமார் மற்றும் 15 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், பாஜக மேலிடம் பூத் ஏஜன்ட்களுக்கு வழங்கிய பணத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறே இந்த தாக்குதலுக்குக் காரணம் எனவும், பாஜக மாநில துணைத் தலைவர் அமர்நாத் சொல்லித்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து, மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் ஏற்பட்ட உள்தகராறு வன்முறையாக மாறியிருப்பது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.