சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் கடந்த சில நாட்களாக இழுபறி நிலை நீடித்து வந்தது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு வேட்பாளர்களை இறுதி செய்தனர்.

இந்த ஆலோசனைக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த பெயர் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளியிடப்பட்ட பட்டியலில், ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் செல்வப்பெருந்தகை, சோளிங்கரில் முனிரத்னம், உதகையில் ராமச்சந்திரன், விளவங்கோட்டில் பிரவீன், கிள்ளியூரில் ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், ஊத்தங்கரையில் குப்புசாமி, கவுண்டம்பாளையத்தில் சூர்யபிரகாஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு, துறையூரில் விச்சு லெனின் பிரசாத், கடலூரில் சந்திரசேகரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

மயிலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகமது, பொன்னேரி (தனி) தொகுதியில் துரைசந்திரசேகர், ஸ்ரீவைகுண்டத்தில் ஊர்வசி அமிர்தராஜ், சங்கரன்கோவிலில் சங்கைக் கணேசன், அம்பாசமுத்திரத்தில் துரை ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நாங்குநேரியில் ரூபி மனோகரன், குளச்சலில் தாரகை கத்பர்ட், அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கில் கோபிநாத் பழனியப்பன், திருவாடனையில் ராம கருமாணிக்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், காரைக்குடியில் மாங்குடி, சிவகாசியில் கணேசன் அசோகன், வேளச்சேரியில் ஹசன் மவுலானா, பென்னாகரத்தில் தமிழ்க்குமரன், கிருஷ்ணகிரியில் செல்லக்குமார் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆத்தூர் (தனி) தொகுதியில் அர்த்தநாரி மற்றும் உசிலம்பட்டியில் டி. சரவணக்குமார் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் களமிறங்குகின்றனர்.

மொத்தத்தில், காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியீடு, தேர்தல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.