திருநெல்வேலி: “தமிழகம் தற்கொலை தலைநகரமாகி வருகிறது; காவல்துறைக்கு எதிராக மட்டும் 14 தாக்குதல்கள் நடந்துள்ளன,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறைந்து, போதைப்பொருள் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நான்கு கொலைகள் நிகழ்ந்துள்ளன. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60% உயர்ந்துள்ளன. பாலியல் குற்றங்கள் 53% அதிகரித்துள்ளன. தமிழகம் தற்கொலை தலைநகரமாக மாறியுள்ளது.

காவல்துறைக்கு எதிராக 14 தாக்குதல்கள் நடந்துள்ளன. கள்ளக்குறிச்சியில் 63 பேரும், கரூரில் 41 பேரும் கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை தமிழக அரசு தவறாக அளித்ததால் தான், மத்திய அரசு DPR-ஐ திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மெட்ரோ வராமல் தடுக்கவே திட்ட அறிக்கையே மாற்றப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவோம் என்று கூறிய வாக்குறுதியை ஏன் நினைவில் கொள்ளவில்லை? திட்டம் நிராகரிக்கப்படவில்லை; 2026 ஜூன் மாதத்திற்குள் கோவை, மதுரைக்கு மெட்ரோ வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மின் கட்டணம் 300% உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் இலவசப் பயணம் தேவையில்லை; ஆனால் சதுர அடிக்கு ரூ.600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியை ஆட்சி நிறைவேற்றவில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.