திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்புடைய உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த தஞ்சைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து திருச்சி வந்த ஏர்ஏசியா விமானத்தில் பயணித்தவர்களின் உடமைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், ஒரு பயணி வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்திலிருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு இது கடத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தஞ்சையைச் சேர்ந்த அப்துல் அமீர் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் யாருக்காக கஞ்சா கடத்தி வந்தார், பின்னணியில் வேறு யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணித்த ஒருவர், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட அரிய இன ஆமை குஞ்சுகளை டப்பாவில் அடைத்து கடத்தி வந்தது பிடிபட்டது. சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து 2,477 ஆமை குஞ்சுகளை பறிமுதல் செய்து, வனத்துறைக்கு ஒப்படைத்தனர். அந்த பயணியிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.