சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாததற்கான காரணத்தை விளக்கி, தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்பதை கட்சி தலைமையிடம் ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக தெரிவித்துவிட்டேன். மாநிலத்தின் ஆலோசனைக் குழுவிலும் நான் போட்டியிட விருப்பமில்லை என்று கூறியிருந்தேன். அதன் அடிப்படையில் தலைமையிடம் சென்ற பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை” என்றார்.

மேலும், மத்திய தலைவர்களிடமும் தாம் போட்டியிட மாட்டேன் என்ற கருத்தை முன்கூட்டியே தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “என்னுடைய முடிவுக்கு கட்சி மதிப்பளித்துள்ளது. அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் தெரிவித்தார்.

தான் போட்டியிடாத போதிலும், கட்சிக்காக முழுமையாக செயல்படுவதே தனது கடமையாக கருதுகிறேன் என்றார். “தமிழகம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்ய தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களிடம் ஆதரவு கோருவேன்” என்று உறுதியளித்தார்.

அண்ணாமலை மேலும் கூறுகையில், “நான் எப்போதும் வேட்பாளர் போட்டியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த தொகுதியையும் நான் கேட்கவில்லை. அது என் நடைமுறையுமில்லை” என்றார்.

தற்போது தனது முக்கிய பணியாக தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாகவும், ஏப்ரல் மாதம் இறுதி வரை முழு கவனம் அதிலேயே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். “இந்த தேர்தலில் என் போராட்டம் முழுவதும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வதில்தான் உள்ளது” என்று கூறினார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னை நம்பி போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முழுமையாக பிரசாரம் செய்ய முடியாதது ஒரு வருத்தமாக இருந்ததாகவும், அந்த குறையை இந்த தேர்தலில் சரி செய்ய முயற்சி செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தபோது, “காலம் இருக்கிறது, காட்சிகள் மாறும். இன்னும் பல தேர்தல்கள் வர இருக்கின்றன. அப்போது நாம் போட்டியிடலாம்” என்றார்.

இத்தேர்தலில் திமுக அரசின் குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அதற்காக வலிமையாக பேசுவது தான் தனது பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

மொத்தத்தில், இந்த தேர்தலில் போட்டியிடாமல் இருந்தாலும், கட்சியின் வெற்றிக்காக முழுமையாக உழைப்பேன் என்ற உறுதியுடன் அண்ணாமலை தனது அரசியல் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.