அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி வெளியிட்ட கருத்துகள் இந்தியா உள்ளிட்ட உலகளவில் கவனம் ஈர்த்துள்ளன. இந்தியா–அமெரிக்கா வர்த்தக உறவை குறித்து பேசிய அவர், “இந்தியர்கள் என்னை மகிழ்ச்சிப்படுத்த விரும்பினர். பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர், சிறந்த நபர். ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவருக்கு தெரியும். என்னை சந்தோஷப்படுத்துவதுதான் முக்கியம். இந்தியர்கள் வர்த்தகம் செய்கிறார்கள்; விரைவில் நாங்கள் அவர்களுக்கு மீது வரிகளை அதிகரிக்கலாம்” என்று எச்சரிக்கை விட்டு பேசினார்.

இந்த கருத்துகள் பல்வேறு வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்க பாடகி மேரி மில்பென், டிரம்பின் இந்த அணுகுமுறைக்கு பதிலளித்ததுடன் பிரதமர் மோடிக்கு தனது திறந்த ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். வாஷிங்டன் டி.சியில் இருந்து வெளியிட்ட தனது கருத்தில், டிரம்பின் மனதில் பிரதமர் மோடியைப் பற்றிய மரியாதை தொடர்ந்தும் இருப்பதாக நம்புவதாக அவர் கூறினார்.

“இந்தியாவைப் பற்றி டிரம்ப் சமீபத்தில் எடுத்துக்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு, அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பது காரணமாக இருக்கலாம். அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன்” என்று மில்பென் வலியுறுத்தினார்.

டிரம்பின் விமர்சனங்கள் அல்லது மிரட்டல்களுக்கு பிரதமர் மோடி ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். “பிரதமர் மோடி மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய ஒரே நபர்கள் இந்திய மக்கள் மட்டுமே. இந்தியர்களின் நலனே பிரதமரின் முதன்மை கடமை” என்று மில்பென் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக சில அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் இருந்து எழும் கருத்துக்கள், அமெரிக்கர்களின் பெரும்பான்மையின் பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்தியாவைப் பற்றி கடுமையாக பேசும் சிலர், அமெரிக்கா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நினைக்கக் கூடாது” என்று மில்பென் கருத்து தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு நேரடியாக உரையாற்றிய அவர், “இந்தியாவின் சிறந்த நலனுக்காக நீங்கள் தொடர்ந்து சேவை செய்து கொண்டு இருங்கள். அதற்காகவே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். இந்தியாவின் உயர்ந்த நலனை காக்கும் முதன்மை பொறுப்பு உங்கள்மீதே உள்ளது” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க உள்நாட்டு அரசியலில் உருவாகும் விவாதங்களும், வர்த்தக தகராறுகளும் நடக்கும் சூழ்நிலையிலும், இந்தியாவின் ஜனநாயகத் தீர்மானத்தையும், பிரதமர் பதவியின் பொறுப்பையும் மையப்படுத்திக் கொண்டு மில்பென் பதிவிட்ட இந்த கருத்துகள், சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.