உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு டிசம்பர் 27, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை மற்றும் மாலை என இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில், மொத்தம் 195 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 04/2025, நாள் 16.10.2025 இன்படி நடத்தப்படும் இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டு (Hall Ticket) தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது User ID மற்றும் Password ஆகியவற்றை பயன்படுத்தி, 11 டிசம்பர் 2025 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் தொடர்பான அனைத்து விவரங்களும் அவர்களது நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை கவனமாகப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள தகவல்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். தேர்வு மையம் தொடர்பான மாற்றம் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அல்லது அதனைச் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறை தீர்க்கும் மையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வர்கள் தங்களது பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க முடியும்.
இந்த தேர்வு, மாநில அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கியமான வாய்ப்பாகும். ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். எனவே, தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, தேர்வு நாளில் தேவையான ஆவணங்களுடன் நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம், இந்த தேர்வு சீராகவும் தடையின்றியும் நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.