வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை – பரபரப்பை ஏற்படுத்திய தொடர் வன்முறை
டாக்கா: அண்டை நாடான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. போலீசார் களம் இறங்கியதால் ஏற்பட்ட மோதல்களில் 1,581 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை அலைக்குப் பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். பின்னர் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றார். ஹசீனாவுக்கு எதிராக குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்தது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என யூனுஸ் அறிவித்தார்.
இந்த சூழலில், வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்தார். மேலும் அடுத்த தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த நண்பரும் சுடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு பதிலடியாக, இந்து வாலிபர் திபு சந்திரதாஸ் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், டாக்கா நகரில் உள்ள தேவாலயத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் திரண்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசி தப்பினர். அதில் சியாம் என்ற இளைஞர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
இந்த தொடர் வன்முறைகளின் பின்னணியில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்து இளைஞர் அம்ரித் மண்டல், நேற்று கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டபோது உள்ளூர் மக்கள் பிடித்து தாக்கியதில் அவர் பலியானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள், வங்காளதேசத்தில் நிலவும் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளன. பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து மக்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளது.