வெள்ளி விலை தாறுமாறாக உயர்வு – புதிய உச்சம் தொட்டது
சென்னை: இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் காண்கிறது. குறிப்பாக, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலை நிலவரம் தாறுமாறாக உயர்ந்து வருவது நுகர்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே விலை ஏற்றம் தொடர் நிலையில் இருந்தாலும், சமீபத்திய உயர்வு வரலாற்றில் இல்லாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
சமீபத்தில் தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது. அதேபோன்று வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.2½ லட்சத்தை கடந்தது. நேற்று மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.70, பவுனுக்கு ரூ.560 அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.12,890-க்கும், ஒரு பவுன் ரூ.1,03,120-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.9, கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.254-க்கும், ஒரு கிலோ ரூ.2,54,000-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274-க்கும், கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து ரூ.2,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.52,000 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆபரணத் தங்கத்தின் விலையும் அதேபோல் அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினர், ஆபரணங்களை வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது.
நிபுணர்கள் கூறுவதாவது, சர்வதேச சந்தையில் விலை உயர்வு, டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், பண்டிகை காலத்தில் அதிகரித்த தேவை ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக உள்ளன. மேலும், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால், தேவை அதிகரித்து விலை மேலும் உயர்ந்துள்ளது.
இந்த விலை நிலவரம் திருமணங்கள் மற்றும் பண்டிகை காலத்தில் ஆபரணங்களை வாங்க திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு இல்லாததால், மக்கள் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.