மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் தொடர்பான விவகாரம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் Vijay கருத்து தெரிவிக்காதது தவறு என நடிகையும் பா.ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாசார பிரிவு செயலாளருமான Kasturi கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று பகல் 11 மணியளவில் நடிகை கஸ்தூரி வருகை தந்தார். கோவிலில் தரிசனம் செய்த பின்னர், மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். அதனைத் தொடர்ந்து, மலை மேல் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட உள்ளூர் மக்களை அவர் சந்தித்து பேசினார். அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நம்பிக்கைக்காக ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அதையும் கொச்சைப்படுத்தி பிரசாரம் செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். தீபத்தூணை ‘சர்வே கல்’ என குறிப்பிடுவது இந்துக்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகவும், நீதிமன்ற உத்தரவு மற்றும் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், திருமாவளவன் குறித்து பேசிய கஸ்தூரி, அவர்மீது முன்னர் வைத்திருந்த மரியாதை தற்போது குறைந்துவிட்டதாக தெரிவித்தார். முருகன் என்ற பெயர் இருக்கிறதா என கேள்வி எழுப்புவது அறியாமை மற்றும் நம்பிக்கையற்ற பேச்சு என விமர்சித்தார். முருகன், குமரன், கார்த்திகேயன் போன்ற பெயர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளதாகவும், அவற்றை நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விஜயை குறிப்பிட்ட கஸ்தூரி, அவர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற நிலையில், கார்த்திகை தீபத்திற்கு ஒரு வாழ்த்தாவது தெரிவித்திருக்கலாம் என சுட்டிக்காட்டினார். தற்போது எம்.ஜி.ஆர். பெயரை முன்னிறுத்தி அரசியல் பாதையில் பயணிக்கும் விஜய், முதல்வராக வேண்டும் என்ற கனவுடன் செயல்படும் சூழலில், திருப்பரங்குன்றம் போன்ற முக்கிய விவகாரங்களில் கருத்து கூறாமல் இருப்பது தவறான அணுகுமுறை என்றும் அவர் தெரிவித்தார்.