விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.

நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களையும், பொதுமக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. மக்கள் மத்தியில் எளிமையும், நேர்மையும் கொண்ட தலைவராக திகழ்ந்த விஜயகாந்தின் மறைவு தமிழ்சமூகத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பாக கருதப்பட்டது.

மறைந்த விஜயகாந்தின் உடல், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் அவரது நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் தேமுதிக கட்சியால் குருபூஜையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அவரது 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நினைவு தின நிகழ்வில் பங்கேற்க, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவர்களின் கண்ணீரும், அன்பும் விஜயகாந்த் மீது கொண்டிருந்த மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.

அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தமாகா தலைவர் ஜி.கே. வாசன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேலும், 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருநாகராஜன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல, திரையுலகப் பிரபலங்களும், திரைப்பட இயக்குநர்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.