பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் ஐ.பி.எல் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. அப்போது மைதானத்திற்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சங்க அலுவலர்கள் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரை சந்தித்து, போட்டிகளை மீண்டும் நடத்த அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் டி.கே. சிவக்குமார் அளித்த பேட்டியில், சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக அமைச்சரவை சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. ரசிகர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, முதற்கட்டமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டிகளில் சுமார் 3,000 ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
விஜய் ஹசாரே தொடரில் டெல்லி அணியின் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் நடத்தப்பட உள்ளன. அந்த அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்களுக்கு மீண்டும் சின்னசாமி மைதானத்தில் அவர்களை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, விராட் கோலி தனது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னசாமி மைதானத்தில் களமிறங்க உள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ள அமைச்சரவை தீர்மானம், ஆர்சிபி ரசிகர்களுக்கும், பெங்களூரு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதேசமயம், கடந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.