“திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்கவே உதவும்” – பியூஷ் கோயல்
மதுரை: தமிழகத்தின் கலாச்சாரம், பெருமையை மதிக்காத உதயநிதியால் முதல்வராக வர முடியாது; திமுகவுக்கு வாக்களிப்பது உதயநிதியை முதல்வராக்குவதற்கே உதவும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் தொழில்துறையினருடன் கலந்துரையாடிய பியூஷ் கோயல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக விமர்சித்தார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ரவுடி ராஜ்ஜியம் அதிகரிப்பதாகவும், போதைப் பொருள் நடமாட்டம்தான் முக்கிய காரணம் எனவும் கூறினார். இளைஞர்கள் பாதிக்கப்பட்டு, சுற்றுலா, தொழில் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக சாடினார்.
மதுரை விமான நிலையம் சர்வதேச நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நினைவூட்டிய அவர், கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு முதலீடு 500 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
துறைமுக சரக்கு போக்குவரத்து இரு மடங்கு, தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே விரிவாக்கம், விமான நிலையங்கள் 78-ல் இருந்து 160 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேர மின்சாரம், குடிநீர் இணைப்பு, 4 கோடி இலவச வீடுகள் வழங்கப்பட்டதாகவும் விவரித்தார். தமிழகத்துக்கு 9 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டும் 3 லட்சம் பேருக்கு இன்னும் வழங்கப்படவில்லை என விமர்சித்தார்.
திமுக ஆட்சியில் உள்கட்டமைப்பு வளர்ச்சி இல்லை; டெண்டர், ஒப்பந்தம், நில ஒதுக்கீடு, குவாரி உரிமம், மதுபானத் தொழில், இடமாறுதல், பணி நியமனங்களில் ஊழல்கள் நடப்பதாகக் கூறினார். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி ஆகியோர் ஊழல்களை அதிகரிப்பதாக சாடினார். மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழல், மின் கட்டண உயர்வு உள்ளதாகக் கூறினார்.
முதல்வர் 12 லட்சம் கோடி முதலீடு வந்ததாகக் கூறினாலும், மதுரைக்கு எதுவும் இல்லை என சாடினார். பி.எம். மித்ரா திட்டத்தில் விருதுநகரில் ஜவுளிப்பூங்கா அனுமதி கிடைத்ததாகவும், கோவை, மதுரை மெட்ரோ திட்டக் குறைபாடுகளை சரி செய்ய தமிழகம் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
உதயநிதி கலாச்சாரத்தை மதிக்காதவர், ஒரு குடும்ப ஆட்சிக்கு திமுக வாக்குகள் உதவும் என எச்சரித்தார். திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் தவறு எனவும், ஏப்ரல் 23 தமிழக வரலாற்று நாள் எனவும் கூறினார். மே 4-ல் பழனிசாமி முதல்வராகி சட்டம் ஒழுங்கு, ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.