புதுடெல்லி:

உலகளவில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக சிக்கல்கள் காரணமாக எண்ணெய் சந்தையில் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஈரான் அருகே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் என்ற கவலை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.

இந்த அச்சங்களுக்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி. (LPG) கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மூடப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகளவில் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் விநியோகம் நடைபெறுகிறது. அதேபோல் இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயில் சுமார் 50 சதவீதம் இந்த வழிப்பாதை வழியாகவே வருகிறது. வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்த பாதை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் விளைவாக ஆயிரக்கணக்கான கப்பல்கள் கடலில் மற்றும் துறைமுகங்களில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா பெரும்பாலும் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருப்பதால், இந்த சூழ்நிலை நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையை சமாளிக்கும் நோக்கில் இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான ரஷியா உதவி வழங்க முன்வந்துள்ளது. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை வழங்க தயாராக இருப்பதாக ரஷியா ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இந்தியா தற்போது ரஷியாவின் உதவியை ஏற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி முதல்கட்டமாக ரஷியா இந்தியாவுக்கு சுமார் 95 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களை வழங்கியுள்ளது. இந்த எண்ணெய் பால்டிக் கடல் மற்றும் கருங்கடல் வழியாக இந்தியாவின் அரபிக்கடல் துறைமுகங்களை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்த கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளதாகவும், ஒரு வாரத்திற்குள் இந்தியாவை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40 சதவீதம் வரை பூர்த்தி செய்ய உதவுவதாக ரஷியா உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவின் எரிசக்தி தேவையில் உடனடி பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எல்.பி.ஜி உற்பத்திக்குத் தேவையான புரோபேன் மற்றும் பியூட்டேன் போன்ற வாயுக்களை பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாகும் எரிவாயு முழுவதும் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) போன்ற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.