தமிழ் திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருபவர் அர்ஜுன் தாஸ். தற்போது அவர் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கான்சிட்டி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும், வடிவுக்கரசி மற்றும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை Powerhouse Pictures நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணியாற்றுகிறார். நகர வாழ்க்கையில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகள், உறவுகள் மற்றும் போராட்டங்களை மையமாகக் கொண்ட கதைக்களம் கொண்ட இப்படம், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உருவாகி வருவதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரு, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தற்போது வரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘கான்சிட்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்திய அளவில் முன்னணி இசை நிறுவனமாக விளங்கும் டி-சீரிஸ் இப்படத்தின் பாடல்களை வெளியிட இருப்பது, படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

பாடல்கள், டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘கான்சிட்டி’ திரைப்படம் அர்ஜுன் தாஸின் திரைபயணத்தில் முக்கிய படியாக அமையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.