புதுடில்லி: டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட காரை புல்வாமாவைச் சேர்ந்த கொலைவெறி டாக்டர் உமர் நபி 11 நாட்களுக்கு முன்பு வாங்கியிருந்தார். அக்டோபர் 29 முதல் நவம்பர் 10 வரை அந்தக் காரை பரிதாபாத்திலுள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே காரில் வெடிகுண்டு வெடித்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலுக்குப் பின்னால் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி அடையாளம் காணப்பட்டுள்ளார். கார் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வாகனம் கடைசியாக புல்வாமாவைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போதைய உரிமையாளர் டாக்டர் உமர் முகமது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. இந்த காரை அவர் 11 நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்ததாக விசாரணையில் வெளிச்சமிட்டுள்ளது.

அக்டோபர் 29 முதல் நவம்பர் 10 வரை அந்தக் காரை பரிதாபாத்திலுள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10 காலை, பதட்டமடைந்த டாக்டர் உமர் நபி காரை ஓட்டி டில்லி நோக்கி புறப்பட்டுள்ளார். அதே நாள் மாலை சுமார் 6.52 மணியளவில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்கலையில் விசாரணை

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரிகள் பரிதாபாத்திலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தினர். கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய டாக்டர் உமர், அந்தக் காரை சுமார் 10 நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த பின்னணியைப் பற்றியும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.