8-வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக உயரும் சம்பளம்! எந்த நிலைக்கு எவ்வளவு உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழு (8th Pay Commission) தொடர்பான மிக முக்கியமான பரிந்துரைகள் மற்றும் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த புதிய பரிந்துரைகள் மற்றும் தேசிய அரசு ஊழியர் கூட்டமைப்பு (FNPO) முன்மொழிந்துள்ள ஊதிய விகிதங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் கணிசமான அளவில், அதாவது தோராயமாக மூன்று மடங்கு வரை அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் பிற கோரிக்கைகள்: 8-வது ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், ஊழியர் சங்கங்கள் தரப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தற்போது நடைமுறையில் உள்ள 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு விகிதத்தை (Annual Increment) 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கான தற்போதைய மாத மருத்துவப் படியை (Medical Allowance) ரூ.1,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு பணமாக்கல் வரம்பை (Leave Encashment) 300 நாட்களில் இருந்து 400 நாட்களாக உயர்த்தவும், தற்போது பெரும் விவாதமாக இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்துவிட்டு, ஊழியர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பான பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்றும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
நிலை வாரியாக அதிரடியாக உயரும் சம்பள விபரங்கள்: 8-வது ஊதியக் குழுவின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊதிய விகிதங்களின்படி, அடிமட்ட ஊழியர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை அனைவருக்கும் சம்பளம் மிக பெருமளவில் உயரவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:
-
நிலை 1 (ஆரம்ப நிலை): தற்போதைய சம்பளம் ரூ.18,000-ல் இருந்து ரூ.54,000 ஆக அதிகரிக்கும்.
-
நிலை 2 முதல் நிலை 5 வரை (குரூப் சி): நிலை 2 ஊழியர்களின் சம்பளம் ரூ.19,900-ல் இருந்து ரூ.59,700 ஆகவும், நிலை 3 ஊழியர்களுக்கு ரூ.21,700-ல் இருந்து ரூ.65,100 ஆகவும், நிலை 4 ஊழியர்களுக்கு ரூ.25,500-ல் இருந்து ரூ.76,500 ஆகவும், நிலை 5 ஊழியர்களுக்கு ரூ.29,200-ல் இருந்து ரூ.87,600 ஆகவும் உயரும்.
-
நிலை 6 முதல் நிலை 9 வரை (குரூப் பி): நிலை 6 ஊழியர்களின் சம்பளம் ரூ.35,400-ல் இருந்து ரூ.1,08,000 ஆகவும், நிலை 7 ஊழியர்களுக்கு ரூ.44,900-ல் இருந்து ரூ.1,37,000 ஆகவும், நிலை 8 ஊழியர்களுக்கு ரூ.47,600-ல் இருந்து ரூ.1,45,200 ஆகவும், நிலை 9 ஊழியர்களுக்கு ரூ.53,100-ல் இருந்து ரூ.1,62,000 ஆகவும் அதிகரிக்கும்.
-
நிலை 10 முதல் நிலை 12 வரை (குரூப் ஏ): நிலை 10 அதிகாரிகளின் சம்பளம் ரூ.56,100-ல் இருந்து ரூ.1,74,000 ஆகவும், நிலை 11-க்கு ரூ.67,700-ல் இருந்து ரூ.2,09,900 ஆகவும், நிலை 12 அதிகாரிகளுக்கு ரூ.78,800-ல் இருந்து ரூ.2,44,300 ஆகவும் உயரும்.
-
உயர்மட்ட மற்றும் மூத்த நிர்வாக அதிகாரிகள் (நிலை 13 – 18): நிலை 13 மூத்த நிர்வாகிகளின் சம்பளம் ரூ.1,18,500-ல் இருந்து ரூ.3,61,500 ஆகவும், நிலை 14 அதிகாரிகளுக்கு ரூ.1,44,200-ல் இருந்து ரூ.4,54,300 ஆகவும், நிலை 15 மற்றும் 16 அதிகாரிகளுக்கு முறையே ரூ.5.74 லட்சம் மற்றும் ரூ.6.57 லட்சம் வரையிலும் சம்பளம் உயரக்கூடும். உச்சக்கட்டமாக, நிலை 18-ல் இருக்கும் அமைச்சரவை செயலாளரின் (Cabinet Secretary) சம்பளம் தற்போதைய ரூ.2,50,000-ல் இருந்து ரூ.8,12,500 ஆக மிக பிரம்மாண்டமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் அமலாக்கம்: துறை வாரியாக முன்மொழியப்பட்ட இந்த பரிந்துரைகளில் உள்ள சில முரண்பாடுகளை சரிசெய்வதற்காக, வரைவுக் குழு உறுப்பினர்கள் டெல்லியிலேயே தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கூட்டு குறிப்பாணை இறுதி செய்யப்பட்டவுடன், அது 8-வது ஊதியக் குழுவின் தலைவரான நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாயிடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
இந்த 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் அமலுக்கு வரும்போது, அவை 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த ஆணையம் தனது இறுதி அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு எவ்வளவு விரைவாக சமர்ப்பிக்கிறது மற்றும் அதற்கு மத்திய அரசு எப்போது ஒப்புதல் அளிக்கிறது என்பதைப் பொறுத்தே இதன் அதிகாரப்பூர்வ அமலாக்கத் தேதி அமையும்.