விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் புதிய திரைப்படம் ‘பூக்கி’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இளைஞர்களை கவரும் ரொமான்ஸ்–காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜய் திஷான் கதாநாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இந்தத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

காதலர் தினத்தை முன்னிட்டு, ‘பூக்கி’ திரைப்படம் 2026 பிப்ரவரி 13ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சசி, படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் குறித்து மனம் திறந்து பாராட்டுகளை தெரிவித்தார்.
சசி தனது உரையில், “இந்த படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளையும், சில முக்கியமான காட்சிகளையும் நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, எனக்கு இரண்டு மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருக்கிறது. அதற்குக் காரணம் இயக்குநர் கணேஷ் சந்திரா. அவர் ஒரு திறமையான சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல; மிகத் தெளிவான பார்வையுள்ள இயக்குநரும் கூட” என்று கூறினார்.
தொடர்ந்து அவர், “நான் தற்போது விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷானை வைத்து, கிராமத்து பின்னணியில் ஒரு படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்தில் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கருப்பு நிற தோற்றத்துடன், மண் மணம் வீசும் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விஜய் ஆண்டனி விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் ‘பூக்கி’ படத்தில் பார்த்தபோது, அதற்கு நேர்மாறாக, எல்லாமே கலர் கலராகவும், ஃப்ரெஷ் தோற்றத்துடனும் இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது” என்றார்.
அஜய் திஷானின் நடிப்புத் திறமை குறித்து பேசிய சசி, “அஜய் என் படத்திலும், ‘பூக்கி’ படத்திலும், முற்றிலும் இரண்டு வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். ஒரு நடிகராக அவர் எவ்வளவு பல்திறன் கொண்டவர் என்பதை இது காட்டுகிறது. உண்மையிலேயே அவர் ஒரு நல்ல திறமைசாலி” என்று பாராட்டினார்.
மேலும், ‘பூக்கி’ திரைப்படத்தின் கதைக்களம் குறித்து அவர் கூறுகையில், “இந்த படத்தில் மிகவும் சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ் சந்திரா குறித்து நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எடுக்கும் கதைகளும், அதை சொல்லும் விதமும் எப்போதும் ஒரு உணர்வோடு இருக்கும்” என்று தெரிவித்தார்.
விஜய் ஆண்டனியின் இசை குறித்து குறிப்பிட்ட சசி, “இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ஒரு பெரிய பலம். சோகமான தருணங்களில் வர வேண்டிய பாடல்கள்கூட, அவருடைய தனித்துவமான ஸ்டைலில், ஒரு வேறுபட்ட வைபுடன் அழகாக அமைந்துள்ளன. இசையும் கதையோடு ஒன்றிப்போகும் விதத்தில் உருவாகியுள்ளது” என்றார்.
மொத்தத்தில், ‘பூக்கி’ திரைப்படம் இளம் ரசிகர்களை மையமாகக் கொண்டு, காதல், உணர்வு மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். காதலர் தின வெளியீடாக வரவுள்ள இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.