சேலம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், நடிகருமான விஜய் இன்று சேலத்தில் நடைபெறும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மைதானத்தில் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

இந்த கூட்டத்தில் விஜய் நேரடியாக பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனுமதி சீட்டு பெற்ற நிர்வாகிகள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். அனுமதி சீட்டு இல்லாதவர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த டிசம்பர் 13ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் விஜய் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு மாமல்லபுரத்தில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திலும், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார்.
ஐந்து மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5,000 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், வரவிருக்கும் தேர்தல் பணிகள் மற்றும் தொகுதி அடிப்படையிலான பொறுப்புகள் குறித்து விஜய் ஆலோசிக்க உள்ளார்.
பாதுகாப்பு மற்றும் அடையாள அட்டைகள் நடைமுறை
இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் கட்சி மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. 5,000 நிர்வாகிகளுக்கே அனுமதி வழங்கப்பட்டு, அவர்களுக்கு QR கோட் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, தவெகவினர் சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் வழிகாட்டு நெறிமுறைகளை சுட்டிக்காட்டி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமாக மாற்றி நடத்த கட்சி முடிவு செய்தது. அதன்படி, 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
கூட்டம் நடைபெறும் இடத்தில் அவசரத் தேவைக்காக மருத்துவக் குழுவுடன் 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் குடிநீர், கழிப்பறை மற்றும் அமர்வு வசதிகள் சீராக அமைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் 20 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அமர வைக்கப்படுவார்கள்.
விஜய் அவர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைவார். அங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரம் சாலை மார்க்கமாக சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கூட்ட அரங்கிற்கு பயணம் செய்வார்.
வியாழக்கிழமை அன்று சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் கூட்ட அரங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர். பாதுகாப்பிற்காக 800 முதல் 1,000 போலீஸார் வரை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொண்டர்களுக்கு வேண்டுகோள்
நடிகர் விஜய் விமான நிலையத்திலிருந்து கூட்ட அரங்கு வரும்போதும், மீண்டும் திரும்பும்போதும் தொண்டர்கள் வாகனங்களைப் பின்தொடர வேண்டாம் என்றும், போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் ஒழுங்கு பேண வேண்டும் என்றும் தவெக நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த கூட்டம் மூலம் தவெக கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.