சென்னை:
வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுக அரசு வேகமாக ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 12 நாள்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான டெண்டர்கள் வெளியிடப்பட்டிருப்பது தேர்தல் முன் கொள்ளை முயற்சியாக உள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாள்களில் மட்டும், மாநில அரசுத் துறைகள் சார்பில் ரூ.15,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 4,385 ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்கள்) வெளியிடப்பட்டுள்ளன. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாட்களே இருக்கும்போது, இவ்வளவு பெரிய அளவில் ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்படுவது கொள்ளைநோக்கத்தோடு செயல்படுவதாகும்,” என அவர் கூறினார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “ஊரக வளர்ச்சி துறை சார்பில் 229, நகராட்சி நிர்வாகம் சார்பில் (சென்னை மாநகராட்சி, பேரூராட்சிகள் உட்பட) 526, மின்சார வாரியம் சார்பில் 84 டெண்டர்கள் என ஒரே நாளில் 839 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் திமுக அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் எவ்வளவு ஆர்வமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது,” என்றார்.
அன்புமணி தெரிவித்ததாவது, “கடந்த 12 நாட்களில் வெளியிடப்பட்ட 4,385 ஒப்பந்தங்களில் 3,788 ஒப்பந்தங்கள் — அதாவது 77% — இந்த மூன்று துறைகளின் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் ஒப்பந்தம் ஐதராபாத் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதே இதற்குச் சாட்சி. அந்த ஒப்பந்தத்தில் ரூ.700 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பதும் அனைவரும் அறிந்ததே,” என அவர் நினைவூட்டினார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, “அடுத்தாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2,000 கோடிக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் இப்போதே பயன்படுத்த முயற்சி செய்கிறது நெடுஞ்சாலைத்துறை. மக்கள் நலனுக்காக அல்ல, கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காகவே திமுக அரசு இவ்வளவு வேகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் குறைந்தபட்சம் 20% கமிஷன் வாங்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன,” என்றார்.
“அப்படியானால், ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு ‘கிக்க்பேக்’ அரசியல்வாதிகளுக்கு செல்லும் என்பது எளிதில் கணக்கிடலாம். ஆட்சியின் முடிவுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்த திமுக, கிடைத்தவரை சுருட்டிக்கொள்ளும் பேராசை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக எச்சரித்துள்ளார்.