சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி – தாம்பரம் வளாகத்தின் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

கோவிட் பேரிடர் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களை தனிமைப்படுத்துவதற்காக (Isolation Ward) கட்டப்பட்ட இந்த கட்டிடம், பேரிடர் குறைந்த பிறகு புதிய மருத்துவ சேவைக்காக மாற்றியமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த கட்டமைப்பு புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி கட்ட ஆதரவு சிகிச்சை வழங்கும் மையமாக மாற்றப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை 180 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. இதில் 16 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), 134 பொதுப்படுக்கைகள், 30 கட்டணப் படுக்கைகள் (Pay Wards) மற்றும் புற மருத்துவப் பிரிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 300 முதல் 400 பேர் வரை புற்றுநோய் நோயாளிகள் இம்மையத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோயின் இறுதி கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு வலி நிவாரணம், அறிகுறி மேலாண்மை, தணிப்பு சிகிச்சை (Palliative Care), உளவியல் மற்றும் சமூக ஆதரவு போன்ற முழுமையான பராமரிப்பு வழங்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும். தனியார் துறையில் இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே இத்தகைய அமைப்புகள் உள்ள நிலையில், அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்படும் இத்தகைய மையம் தமிழகத்தில் தொடங்கப்பட்டிருப்பது சிறப்பான முன்னேற்றமாகும்.

இந்த மையம் சிறப்பாக செயல்பட ஆண்டுதோறும் ரூ.7.44 கோடி பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுடன் இணைந்து அருகிலுள்ள தேசிய சித்த மருத்துவமனை மருத்துவர்களும் சேவையில் ஈடுபடவுள்ளனர். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் நோயாளிகளுக்கு முழுமையான பராமரிப்பு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தாம்பரம் பகுதியில் மருத்துவ கட்டமைப்புகள் வேகமாக வளர்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ரூ.115.38 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தொடங்கப்பட்டு, தினமும் சுமார் 2,500 புற மருத்துவ பயனாளிகள் மற்றும் 250 உள் நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அங்கு இதுவரை 1,800 அறுவை சிகிச்சைகள் மற்றும் 1,200 பிரசவங்கள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

அந்த மருத்துவமனைக்கு அருகில் தேசிய சித்த மருத்துவமனை மற்றும் மாநில அரசின் காசநோய் மருத்துவமனை அமைந்துள்ளன. பல்வேறு மருத்துவ சேவைகள் ஒரே வளாகத்தில் கிடைப்பது தாம்பரத்தை முக்கிய மருத்துவ மையமாக மாற்றியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி கட்ட வாழ்க்கையை மனிதநேயத்துடன் கவனித்து, அவர்களுக்கு மனஅமைதி மற்றும் கண்ணியமான பராமரிப்பு வழங்கும் நோக்கில் இந்த புற்றுநோய் நல் ஆதரவு மையம் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு மக்கள் பிரதிநிதிகள், உயரதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.